Top Ad unit 728 × 90

எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா பெயரில் தீபா புதிய கட்சி : கதிகலங்கிய சசிகலா வட்டாரம்!

தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று தொடங்கினர்.

கட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

தீபாவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால், சசிகலா வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளன.

அ.தி.மு.க., பொதுச்செயலராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவை, அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், 'ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும்; ஜெ., விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக, தமிழகம் முழுக்க பல இடங்களில், தீபா பெயரில் பேரவை தொடங்கி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோட்டில் நேற்று, தீபா ஆதரவாளர்கள், புதிய கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர்.

ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலரும், 22வது வட்ட செயலருமான தமிழ் மாதேஸ் வீட்டில், கட்சியின் தொடக்க விழா நடந்தது.மீனவரணி மாவட்ட செயலர் பாரூக், கொடுமுடி முன்னாள் சேர்மன் தமிழ்செல்வி, 57வது வட்ட செயலர் சரவணன் உட்பட, 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என, கட்சிக்கு பெயரிட்டுள்ளனர். கறுப்பு, சிவப்பு, நடுவில் வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

வெள்ளை பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன; இரட்டை ரோஜாவை சின்னமாகவும் அறிவித்துள்ளனர்.

'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடு மற்றும் கட்சியை காப்பாற்ற, ஜெ. தீபாவை, தலைமையேற்று வழிநடத்த அழைக்கிறோம்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, இரண்டு முதல், ஐந்து லட்சம்உறுப்பினர்களை சேர்ப்பது; ஜெ., வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்; எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்' என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், பெரியசோரகை பஞ்சாயத்தில் உள்ள, 42 அ.தி.மு.க., கிளை கமிட்டிகளில், 31 கிளைகள் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக, தீபா பேரவையை தொடக்கி உள்ளனர்.

பேரவை ஒன் றிய செயலராக, முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலர் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 17ம் தேதிக்குள்,நங்கவள்ளி ஒன்றியத்தில், 300 தீபா பேரவை கிளை கமிட்டிகளை அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சசி ஆதரவாளர்கள் கலக்கம்

பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களின் பல பகுதிகளில், தீபாவை ஆதரித்து பேனர்கள் வைப் பது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதே நேரத்தில், சசிகலாவின் பேனர்கள் கிழிக்கப் படும் சம்பவங்களும்அதிகரித்துள்ளன.

பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்கள் மட்டு மல்லாமல், தமிழகம் முழுவதுமே தீபாவுக்கு ஆதரவு பெருகுவதால், சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

இதனால், பல பகுதிகளிலும், தீபாவை ஆதரித்து வைக்கப்படும் பேனர், போஸ்டர்களை கிழித்து எறிகின்றனர். மேலும், போலீசார் உதவியுடன், அவற்றை அகற்றியும் வருகின்றனர்.

'இளைய புரட்சி தலைவி'

தீபாவிற்கு, திண்டுக்கல் மாவட்டத்திலும் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். கோட்டப்பட்டியில் கிராமமே ஒன்றுதிரண்டு, பிரம்மாண்ட பேனரை, தீபாவிற்கு ஆதரவாக வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், 13 இடங்களில் பிரசார பயணம் மற்றும் பொதுக் கூட்டங்களை, போலீசாரின் அனுமதி பெற்று நடத்த, தீபாவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஜன., 22ல், 'இளைய புரட்சி தலைவி ஜெ.தீபா பேரவை' சார்பில், செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடக்கிறது.

இது குறித்து, பேரவை நிர்வாகிகள் சகாயம், முத்தரசன், ராஜன் கூறியதாவது:

உடனடியாக ஆதரவாளர்களை ஒன்றிணைப்பது கடினம். எங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தலைமையில், மாவட்டந்தோறும் ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். தீபாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சார்பில், செயற் குழு நடத்த திட்டமிட்டுள்ளோம். அனுமதி வழங்கக் கோரி, திண்டுக்கல் எஸ்.பி.,யை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்'

'எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' சார்பில், இரண்டாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியிடும் கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது:

நம் பொறுப்பாளர்களுக்கு மிரட்டல் வருவதாக தகவல் வருகிறது. ஆயிரம் மிரட்டல்கள் வந்தாலும், பயந்து விடக்கூடாது. நாம், ஜெயலலிதாவின் வாரிசுகள். உண்மையான தொண்டர்கள் மற்றும் மக்கள், தீபா பக்கம் உள்ளனர்.

வரும், பிப்., 24ல், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, தீபா முன்னிலையில், உறுப்பினர்கள் சேர்க்கை விபரம் அளிக்கப்படும்.தொடர்ந்து, அவரது அறிவுரைப்படி, சேலம் போஸ் மைதானத்தில் மாநில மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதுவரை, 28 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா பெயரில் தீபா புதிய கட்சி : கதிகலங்கிய சசிகலா வட்டாரம்! Reviewed by Unknown on 6:20:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.