Top Ad unit 728 × 90

சுன்னாகம் பொலிஸ் நிலைய கைதி கொலை:நான்கு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு!

யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்த போதே ஏனைய சந்தேக நபர்களான முன்னாள் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார உள்ளிட்டோரைக் கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த படுகொலை விவகாரம் தொடர்பில் ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் தர அதிகாரியான டப்ளியூ.டி. சோமதாஸ வீரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு நேற்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன் போதே அவரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஏனைய சந்தேக நபர்களான சுன்னாகம் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பண்டார, ஆர்.எம்.ராஜபக்ச, ஜயந்த மற்றும் மயூரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்களை உடன் கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராசா சுமன் என்ற நபர் 2011ம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.

களவு தொடர்பான வழக்கொன்றில் கைதுசெய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சுமன் எனப்படும் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தில் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது குறித்த நபர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதுடன் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார் என்று அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சடலத்தில் தாக்குதல் நடாத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டமை பிரேத பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றத்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இரகசிய பொலிஸாரினால் நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இதுவொரு கொலை என நம்பக்கூடியவாறான சாட்சியங்கள் உள்ளதென குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தனர்.

அவரின் ஆலோசனைக்கு அமைவாகவே சுன்னாகம் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அறுவர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய கைதி கொலை:நான்கு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு! Reviewed by Unknown on 7:01:00 PM Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by How Lanka ©2016
Powered By How Lanka, Designed by How Lanka Team

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.